இலங்கையின் பாதுகாப்புப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுடன் மேம்படுத்துவது இன்றியமையாதது – இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் உங்களது பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தினால், இந்தியாவிலிருந்து பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் கொள்முதலானது எங்களது ஒத்துழைப்பில் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு மற்றும் இருநாட்டு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (ஜூன் 07) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த  பண்டார தென்னகோன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்து கொண்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களின் தொடக்க உரையில், தங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அனைத்துக் துறைகளிலும் இலங்கையுடனான ஒத்துழைப்பை பெறுமதி வாய்ந்ததாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது  பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில்  இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

மேலும், உள்ளூர் கைத்தொழில்கள் மற்றும் இலங்கை பாதுகாப்பு படைகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எமது பாதுகாப்பு வாகனங்களை காட்சிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இந்திய தொழில்துறை நிபுணர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இந்த நிகழ்வானது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள நமது பாதுகாப்புப் படைகளை தொடர்ந்து நவீனமயமாக்குவதன் மூலம், இந்த முன்னேற்றங்களில் நாம் முன்னணியில் இருப்பது அவசியம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரிமோட் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு செயலாளர் (உற்பத்தி) கிரிதர் அரமனே, இந்தியாவின் முக்கிய  பங்காளிகளில் இலங்கையும் ஒன்று என்றும் இருதரப்பு உறவுகளில் அது முக்கிய தூணாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கை இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோர் இரு நாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விஷேட புத்தகம் இந்திய உயர்ஸ்தானிகரால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம்  கையளிக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் துறையின் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,  இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, விமானப்படையின்  பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு,  முப்படைகளின் முன்னாள் தளபதிகள், சிரேஷ்ட பாதுகாப்புப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *