அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத சமுர்த்தி பயனாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் பயன் பெறும் பயனாளர்கள் பற்றிய ஆவணங்கள் தற்போது வௌிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்று வந்த பயனாளர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. 

ஸ்திரமற்ற பொருளாதார நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 04 பிரிவுகளின் கீழ்  அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் வௌியிடப்பட்டிருந்தன.

எனினும், நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து  மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படாத பொதுமக்கள் திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்வை வௌிப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு சென்றிருந்த உதவி பிரதேச செயலாளர் மக்களிடம் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே, மன்னாரில்  அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, மன்னார் – தலைமன்னார்  வீதியை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சில உறுப்பினர்களுடன் மாவட்ட செயலாளர் கலந்துரையாடியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

வத்தளை பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் பொதுமக்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிலருக்கு கலந்துரையாடலொன்றுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் தீர்வு கிடைக்கவில்லை.

மாத்தறை – காலி பிரதான வீதியின் வெலிகம பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்திற்கு பயனாளர்கள் தெரிவு செய்யப்படும் விதம் தொடர்பிலான தகல்களை வௌியிடுமாறு இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் வெலிகம பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது. 

இதனிடையே, இமதுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தில்  உள்ளடக்கப்படாத மற்றுமொரு சாரார் தொழுவ பிரதேச செயலகம், திவிநெகும காரியாலத்திற்கு சென்று இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இந்த நலன்புரி திட்டத்தை தற்காலிகமாக  கைவிட்டு விட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்றைய சபை அமர்வின் போது கோரிக்கையை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *