காணாமற்போன டைட்டன் நீர்மூழ்கியிலிருந்த 5 பேரும் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க கரையோர பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் டைட்டன் நீர்மூழ்கியின் முக்கிய ஐந்து பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 1600 அடி தூரத்தில் இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதையும் அமெரிக்க கரையோர பாதுகாப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது.
டைட்டன் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பலமான வெடிப்புச் சத்தத்தை அமெரிக்க கடற்படை கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்மூழ்கியில் புதிய இடங்களைத் தேடிச்செல்லும் பிரித்தானியாவைச் சேர்ந்த 58 வயதான ஆர்வலர் ஒருவரும் பாகிஸ்தானின் செல்வந்த குடும்பமொன்றின் உறுப்பினரும் பிரித்தானிய வர்த்தகருமான 48 வயதுடைய ஒருவரும் அவரது 19 வயது மகனும் 77 வயதான பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் சுழியோடியும் டைட்டன் நீர்மூழ்கியை இயக்கும் OceanGate நிறுவனத்தின் 61 வயதான பிரதம நிறைவேற்று அதிகாரியும் இருந்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.
இதேவேளை, டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிடும் சுற்றுலாப் பயணங்கள் நிறுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.