பதுளை, ஹூனுகொட்டுவ வீதியின் இருபுறமும் நீண்டகாலமாக இயங்கி வரும் தினசரி மரக்கறி சந்தை விற்பனையாளர்களுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர கட்டிடம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
பதுளை மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு உலக வங்கியின் உதவியுடன் LDSP திட்டத்தின் மூலம் 25 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மரக்கறி விற்பனையாளர்கள் 28 பேருக்குக் கட்டடத்தின் கீழ்த் தளத்திலும், அதே வீதியில் கடைகளை நடத்தி வந்த வியாபாரிகளுக்கு மேல் தளத்திலும் இடங்களை ஒதுக்கி வழங்கும் பணிகளை மாநகரசபை நிர்வாகம் முன்னெடுத்துவருகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், நகரை அழகுபடுத்துதல், வியாபாரிகளுக்குக் குறிப்பிட்ட இடம் வழங்கல், வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பு, நகராட்சியின் வருவாயை அதிகரிப்பது எனப் பல சேவைகளை இந்த புதிய கட்டட நிர்மாணித்தலின் மூலம் மாநகர சபை பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க சாமர சம்பத் தசனாயக, பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய உள்ளிட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ், உள்ளாட்சி மன்ற ஆணையர் ஹேமந்த திசாநாயக்க, பதுளை மாநகரசபையின் மாநகர ஆணையாளர் ஜகத் ஆரியரத்ன, CDLG மற்றும் LDSP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.