· நாம் முகம்கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பழைய சட்டங்களிலேயே தங்கியிராது புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்…
- பிரதமர் தினேஷ் குணவர்தன
· பருத்தித் தொழிற்துறையின் மூலம் நவநாகரீக உலகுக்கு பிரவேசிப்போம்…
- UNDP வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா,
இன்று (2023.10.07) அலரி மாளிகையில் நடைபெற்ற “சங்கதன மண்டபய“ உரைத் தொடர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய உரைத் தொடர் உலக பருத்தித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“உலகப் பருத்தி தினமானது உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையால் விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தினத்தை அர்த்தமுள்ளதாக்க பாடுபட வேண்டும்.
பல மாவட்டங்களில் பயிரிடப்படாத அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உள்ளன. இந்த நிலங்களை பருத்தி செய்கை போன்ற பயனுள்ள தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். அதற்கான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
தொடர்ச்சியான தேசிய திட்டத்தின் மூலம் பருத்தி செய்கையை விரிவுபடுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரித்து நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்க முடியும். அதற்காக தனியார் துறையின் முயற்சியை பாராட்டுகிறேன். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் இத்தகைய செய்கையில் ஈடுபட நம்பிக்கை தேவை. அதற்கு, எமது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். மேலதிக வருமானமாக, சிறு தோட்டங்களில் பருத்தி செய்கை செய்யும் முறையை உருவாக்க வேண்டும்.
விவசாயத்தின் மூலம் தலை நிமிர்ந்து நிற்கும் திறன் எம்மிடம் உள்ளது என்ற நம்பிக்கையில் குடியேற்றங்களை உருவாக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்த குடியேற்றங்களில், ஒவ்வொரு நிலத்திலும் விவசாயத்திற்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது. அதற்கு மக்கள் வழிப்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்.
சில கட்டிடங்களில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திராதிகள் உள்ளன. சில எம் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. இந்த வளங்களை பல்கலைக்கழகங்கள் அல்லது வணிகங்களுக்கு வழங்கி இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் முகம்கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் அத்தகைய மாற்றத்தை நாம் சந்திக்க வேண்டும். அதற்கு, பழைய சட்டங்களின் அடிப்படையில் அல்லாமல் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகள் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. விதை உற்பத்தி குறித்தும், விதைகளால் ஏற்படும் பல நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விளக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் பொது கிராமங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாயில்களைத் திறப்பதன் மூலம், எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் பிள்ளைகள் பயனடைவார்கள்.
வாழ்க்கைச் சுட்டெண் குறைந்துள்ளது. ஆனால் பொருட்களின் விலை குறையவில்லை. விவசாயிகள் மிகை உற்பத்தி செய்தாலும், மக்களின் வாங்கும் சக்தியால்தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு விலையில் நம்பிக்கை தேவை. அதற்கு, தனியார் துறையும், அரசும் இணைந்து விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா…
“தனியார் துறை மற்றும் விவசாயிகளின் செயற்திறமான பங்களிப்புடன் இலங்கையின் பருத்தித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். 2500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்தத் தொழில் கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தப் பயன்படும். பருத்தி துணி உற்பத்திக்கு கூடுதலாக, பருத்தி எண்ணெய் மற்றும் கால்நடை தீவனம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் பருத்தி தொழில் தொடர்பான பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பருத்தி செய்கையின் மூலம் நவநாகரிக உலகிற்கு (Farm to Fashion) பிரவேசிக்க முடியும்
சிறிய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உட்பட கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளை பாராட்டுகிறேன்.
இந்த நிகழ்வில் பொறியியலாளர் புத்திக மாரசிங்க பிரதம உரையை நிகழ்த்தியதுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சீதா அறம்பேபொல, அசோக பிரியந்த, விஜித பேருகொட, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் சமரவிக்ரம, யதாமினி குணவர்தன, அமைச்சின் செயலாளர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளம் தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொலன்னறுவை வெலிகந்த பருத்தி விவசாயிகள் பருத்தி உற்பத்தி செயன்முறையை உள்ளடக்கிய பெட்டகம் ஒன்றை பிரதமருக்கு வழங்கி வைத்த போது.