திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படும்.

திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்ட ஈட்டு கொடுப்பனவு காசோலையும் மற்றும் புதிதாக விவசாய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொண்ட விவசாயிகளுக்கான பற்றுச்சீட்டும் வழங்கும் நிகழ்வானது இன்று (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகம், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் ஊடாக 2022, 2023 பெரும்போகத்தில் பயிர் காப்புறுதி செய்த மற்றும் அரசினால் வழங்கப்படுகின்ற மானிய காப்புறுதியினூடாகவும் வெள்ளம், வரட்சி, யானை அழிவு, நோய்களும் பீடைகளினாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்ட ஈட்டு கொடுப்பனவு காசோலையும், புதிதாக விவசாய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொண்ட விவசாயிகளுக்கான பற்றுச்சீட்டும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 736 விவசாயிகளுக்கான 22.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 47 விவசாயிகளுக்கான காசோலை இன்று வழங்கப்பட்டதுடன் மீதமாகவுள்ள விவசாயிகளின் நட்ட ஈட்டு கொடுப்பனவு அவர்களின் வங்கி கணக்கின் வரவில் வைப்பில் இடப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர் கே.எல்.அன்சார் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கருணைநாதன், கமநல சேவைகள் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். Mulipothan.saheeth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *