பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.12.14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் 1000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான GPV Group A/S இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டதாக தெரிவித்தார். டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார். முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.
கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தில் MAERSK இன் செயற்பாடுகளுடன் SAGT ஐ விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். MAERSK இனால் ஜப்பானிய நிதியுதவியுடன் ஒரு நிறுவன குழுமத்தை உருவாக்கும் செயன்முறையை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு