- தனிநபர்களின் வாழ்க்கையிலும் நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதிலும் கல்வியின் செல்வாக்கினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது…
- கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் எமது சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரினதும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்…
- பிரதமர் தினேஷ் குணவர்தன
இன்று (7) கொழும்பில் நடைபெற்ற மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய வலய சர்வதேச பாடசாலைகளின் அதிபர்கள் சம்மேளன (CBSE Gulf Sahodaya) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-
சேவைக்கான அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலை அதிபர்களின் இந்த அமைப்பு கடந்த மூன்று தசாப்தங்களாக எமது சமுதாயத்தின் பொறுப்பை கையளிக்கக் கூடிய இளம் தலைமுறைக்கு அவர்களது எதிர்கால அபிலாஷைகளை அடைந்துகொள்ளக்கூடிய வகையில் கல்வியின் தரத்தை வளர்ப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சுபீட்சத்திற்கும் அடிப்படை கல்வியாகும். நாளைய தலைவர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடையவர்கள் எங்கள் பாடசாலைகள் மூலமே போசிக்கப்பட்டு வடிவமைக்கப்படுகிறார்கள். நீங்கள் எமது மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் அவர்களை வலுவூட்டுவதற்கான இந்த மாற்றத்திற்கான செயன்முறையில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள்.
வளைகுடா பகுதி, ஆபிரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல நாடுகளில் கல்வியில் இலங்கையின் பங்களிப்பையிட்டு நாம் உண்மையிலேயே பெருமையடைகிறோம். நான் சந்திக்கும் அந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் அந்த நாடுகளில் உள்ள இலங்கை ஆசிரியர்களின் பணியை மிகவும் பாராட்டுகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளீர்கள். கோவிட்-19 தொற்றுநோய் எங்கள் கல்வி முறைகளுக்கு சவாலாக மாறியபோது, உங்கள் திறமை மற்றும் உறுதியுடன் புதிய முறைகள் மூலம் அதை எதிர்கொண்டீர்கள். வழக்கமான வகுப்பறைகள் முதல் தொலைநிலைக் கல்வி மாதிரிகள் வரை, நீங்கள் கல்வியில் புத்தாக்கங்களை படைத்துள்ளீர்கள்.
ஒரு தலைவனாக, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மலரத் துடிக்கும் ஒவ்வொரு பூவும் மலர வாய்ப்பளிக்கப்படும் ஒரு சமூகத்தை நாங்கள் கனவு காண்கிறோம். ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்விக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டு, உலகின் சவால்களை எதிர்கொள்ளகூடிய வகையில் அவர்களை தயார்படுத்த வேண்டும். அரசாங்கம் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கல்வியில் முதலீடு செய்வதுடன், முதலீட்டை சமமாக பகிரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பொறுப்பு கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டுமானதல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. இதற்கு அனைத்து மட்டங்களிலும் பெற்றோர்கள், சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களின் செயற்திறமான பங்கேற்பு தேவைப்படுகிறது. கல்வியின் அடிப்படைக் கூறுகளுக்கு மேலதிகமாக, பண்பு வளர்ச்சி மற்றும் முழுமையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். கல்வியின் முன்னோடிகளாக, பிள்ளைகளுக்கு மத்தியில் நேர்மை, பரிவு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை வளர்ப்பது அவசியம்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வரும் உலகத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவது மிகவும் முக்கியமானது. எமது இளம் தலைமுறை கல்வியில் மட்டுமின்றி, தொழில்நுட்ப அறிவும் பெற்றவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனிநபர்களின் வாழ்க்கையிலும் நாடுகளின் தலைவிதியை தீர்மானிப்பதிலும் கல்வியின் சக்திவாய்ந்த செல்வாக்கினை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எமது தேசத்தின் எதிர்காலம் கற்றறிந்தவர்களின் ஞானத்தாலும் கருணையாலும் வழிநடத்தப்படும் மாணவர் தலைமுறையிலேயே தங்கியுள்ளது என்பதை விளங்கி அந்த பணிகளை திடவுறுதியுடன் முன்னெடுப்பதற்கு எம்மை அர்ப்பணிப்போம். கல்வியில் சிறந்து விளங்கவும், எமது சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, கல்ப் சகோதய இரண்டாம் நிலை கல்விப் பேரவையின் CBSE தலைவர் வி.ஆர்.பழனிசாமி, பொதுச் செயலாளர் கலாநிதி வி. பினுமோ மற்றும் CBSEயின் அதிகாரிகள், நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச பாடசாலைகளின் அதிபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு