வியட்நாம் டிஜிட்டல் விவசாய நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது

வியட்நாம் விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் Minh Hoan Le அவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (பெப்ரவரி 21) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார். நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள், குறிப்பாக கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

வியட்நாம் விடுதலை இயக்கத்தின் போது இலங்கை வழங்கிய ஆதரவிற்கு வியட்நாம் அமைச்சர் நன்றி தெரிவித்தார். வியட்நாம் சுதந்திரம் அடைந்து ஒன்றிணைந்த பின்னர் முதலில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றார்.

வீரம் மிக்க சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற வியட்நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருப்பதையிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் கடைப்பிடித்த புதுமையான வழிமுறைகளைப் பாராட்டிய அவர், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் Minh Hoan Le, பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், வியட்நாம் இலங்கையை ஒரு சிறப்பு நண்பராகக் கருதுவதாகவும், டிஜிட்டல் விவசாயம் மற்றும் ஸ்மார்ட் விவசாயத்தில் நிபுணத்துவத்தை தனது நாடு பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.

பௌத்தம் மற்றும் சோசலிசத்தின் வளமான பின்னணியைக் கொண்ட இரு நாடுகளும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக்கு ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றார். எனவே இரு நாடுகளும் விவசாய மேம்பாட்டின் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.

உயர்மட்ட வியட்நாம் தூதுக்குழுவில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக், பணிப்பாளர் நாயகங்கள், நுயென் டோ அன் துவான், லு ட்ருங் குவான், நுயென் நு குவாங், ஹுய்ன் டான் டாட் மற்றும் லு டக் தின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் சேனாரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சசிகலா பிரேமவர்தன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *