ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கான மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ஜப்பானின் உதவியுடன் ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் புதிதாக நிறுவப்பட்ட லங்கா நிப்பொன் பிஸ்டெக் நிறுவனம் (LNBTI) இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மாணவர்களின் தொழில்நுட்ப அணுகலை அதிகரிப்பதற்காக LNBTI நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜப்பானின் பதில் தூதுவர் திரு.கட்சுகி கொட்டாரோ, இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க ஜப்பான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார். தங்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிபெற நவீன தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிறுவனத்தில் சேர விரும்பும் கிராமிய மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று LNBTI பணிப்பாளர் ரவீந்தர் பெரேரா குறிப்பிட்டார்.
இந்த அதிநவீன சாதனங்களை வழங்குவதன் மூலம், மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடரும் LNBTI மாணவர்களை வலுவூட்ட எதிர்பார்க்கப்படுகிறது. LNBTI என்பது இலங்கையில் ” hSenid Ventures ” மற்றும் “Metatechno Inc” ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுமுயற்சியாகும். இந்த நிறுவனம் ஜப்பான் மற்றும் தெற்காசியாவில் பட்டப்படிப்புகளை வழங்க தகுதி பெற்ற முதல் மற்றும் ஒரே ஜப்பானிய உயர்கல்வி நிறுவனம் ஆகும்.
புத்தாக்கம், கல்வி மற்றும் சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துமாறு LNBTI மாணவர்களை பிரதமர் ஊக்குவித்தார். தொழில்நுட்ப பட்டதாரிகளை ஊக்குவிப்பதற்காக தொழில்நுட்பத்தின் திறனை வெளிக்கொணரும் LNBTI இன் அர்ப்பணிப்பை இந்த திட்டம் அடையாளப்படுத்துவதுடன், தகவல் தொழில் வல்லுநர்களின் பங்களிப்பின் மூலம் இரு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட எதிர்கால முயற்சிகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, LNBTI பணிப்பாளர் சமன் குமார மற்றும் கல்வி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு