( காளிமுத்து சத்தியசீலன் )
முன்னரே குறிப்பிட்டபடி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்த மழை எதிர்வரும் 09.04.2025 வரை நீடிக்கும்
தற்போது கிடைக்கும் மழை இடி மின்னல் நிகழ்வுகளோடு இணைந்ததாகவே இருக்கும். .இடி – மின்னல் இரண்டு வகைப்பட்டதாகும்.
- இரண்டு முகில்களுக்கிடையிலான கிடையான (Horizontal) மின்னேற்றம்.
- பூமியின் மேற்பரப்பிற்கும் முகில்களுக்கும் இடையிலான குத்தான (Vertical) மின்னேற்றம்.
இதில் குத்தான மின்னேற்றமே எமக்கு உயிர், உடல் மற்றும் சொத்துப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இதில் உயிர் மற்றும் உடற் பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன:
- மார்ச், ஏப்ரல், மே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி (20 மி.மீ.) தொடங்கும் போதே அடுத்து இடி – மின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்திற்கு நகர்தல்.
- பரந்த மற்றும் வெட்ட வெளிகளில் நிற்பதனைத் தவிர்த்தல்.
- திறந்த வெளிகளில் திறந்த வாகனப் (சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தைத் தவிர்த்தல்.
- தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.
- மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனைத் தவிர்த்தல். மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக எக் காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்காதிருத்தல்.
- விவசாயிகள் விவசாய உபகரணங்களைப் பாவிக்காதிருத்தல்.
- ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடி – மின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின் தாடையைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். இது செவிப்பறைப் பாதிப்பைத் தடுக்கும் (இதனால் தான் எமது முன்னோர் இடி – மின்னலின் போது ‘அர்ஜூனனுக்கு அபயம்’ எனக் கூற வேண்டும் என்று தெரிவித்தனர்).
- இயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனைத் தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.
- வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனைத் தவிர்த்தல்.
மேற்கூறிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இடி – மின்னல் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
