“தேசிய கல்வியியல் கல்லூரிகளை மிக உயர்தரமான கல்வி மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்”
-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் அவற்றை மிக உயர்தரமான கல்வி மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
திறந்த போட்டியின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 246 புதிய ஆசிரியர் கல்வியியலாளர் உத்தியோகத்தர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, 2026 நவம்பர் 09ஆம் திகதி இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய நடத்தப்பட்ட தகுதிப் பரீட்சைகள், செய்முறைப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் சித்தியடைந்த உத்தியோகத்தர்கள் இன்று (09) உத்தியோகபூர்வமாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பாடசாலை மட்டப் பாடத்திட்டங்களைத் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்தியமைப்பதுடன், கல்வியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் அவற்றை உயர்தரமான ஆசிரியர் கல்வி மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இதன் ஊடாக மேம்பட்ட மனப்பாங்குகள், திறன்கள் மற்றும் ஆளுமைப் பண்புகளைக் கொண்ட ஆசிரியர் தலைமுறையொன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பாரம்பரிய ஆசிரியர் மையக் கற்பித்தல் முறையிலிருந்து விலகி, மாணவர் மையக் கற்றல் செயற்பாட்டை நோக்கி நகரும்போது ஆசிரியரின் பங்களிப்பு குறைவதாக சில சந்தர்ப்பங்களில் தோன்றக்கூடும். எனினும், இத்தகைய கற்றல் முறையில் ஆசிரியரின் பொறுப்பும் பங்களிப்பும் மேலும் தீர்மானமிக்கதாக அமையும் என பிரதமர் தெரிவித்தார். அதற்கமைய, ஆசிரியர் என்பவர் வெறுமனே அறிவையும் தகவல்களையும் வழங்குபவராக மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தலைமைத்துவப் பண்புகள் நிறைந்தவராகவும், குழுக்களை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவராகவும், ஒவ்வொரு பிள்ளையிடமும் காணப்படும் உச்சபட்ச ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணரக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி மாற்றத்தை ஓர் அரசாங்கத்தினாலோ அல்லது ஒரு சில அதிகாரிகளினாலோ மாத்திரம் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்றும், இது நாட்டின் மக்களினதும் பெற்றோரினதும் பிள்ளைகளினதும் உரிமையாகும் என்பதால் அனைவரினதும் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், இலங்கைப் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வி மீது மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டு முதலாம் தரம் முதல் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புகின்றனர் எனக் குறிப்பிட்ட பிரதமர், சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் வழங்கப்பட்ட அந்த இலவசக் கல்வி உரிமையையும் நம்பிக்கையையும் பாதுகாத்து, புதிய உலகின் தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி முறைமையைத் தயாரிக்க வேண்டும் என்றும் நினைவூட்டினார்.
அண்மைக் காலத்தில் இலங்கை பாதுகாத்துக்கொள்ளக் கிடைத்த மிக உயர்ந்த வளம் கல்வி முறைமையே எனச் சுட்டிக்காட்டிய அவர், அது எந்தவொரு அரசாங்கத்திற்கும் மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், அது இந்நாட்டு மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்பும் கனவுமாகும் என்றும் தெரிவித்தார். அந்தக் கனவை நனவாக்குவதற்கான பிரதான பொறுப்பு ஆசிரியர் கல்வியியலாளர் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தற்போது நடைமுறையில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமா பாடநெறியை உயர் டிப்ளோமா மட்டத்திற்கும், அதனைத் தொடர்ந்து கல்வியியல் சிறப்புப் பட்டப்படிப்பு மட்டத்திற்கும் தரமுயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட கொள்கை ரீதியான வாக்குறுதியான பயிலுநர்களுக்குப் பட்டப்படிப்பை வழங்கும் நோக்கம் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் கல்வியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றமடையும் இடைக்காலக் கட்டத்தில் புதிய மாணவர்கள் இணைந்துகொள்வதால், ஏனையோருக்கு இல்லாத சவாலான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இது கல்வி முறைமையின் சாதகமான அனுபவமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய ரீதியில் இடம்பெறும் மனப்பாங்கு மற்றும் மூலோபாய மாற்றங்களுக்கு இணையாக, பல்கலைக்கழகங்களுக்கு இணையான வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் மற்றும் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் ஆசிரியர் தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு, கல்வியியல் கல்லூரிகளின் சூழலிலும் பாடத்திட்டங்களிலும் அத்தியாவசியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.