மாற்றுத்திறனாளிகளில் தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டம் ආබාධ සහිත පුද්ගලයින් අතර ව්‍යවසායකයින් සඳහා පුහුණු වැඩසටහනක්

சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி திட்டம் இன்று (08) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்விற்கு மூதூர், கிண்ணியா கோமரன்கடவெல, குச்சவெளி, தம்பலகாமம், பட்டினமும் சூழலும், வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவிலிருந்து பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை தனித்தனியாக பார்வையிட்டதுடன், எவ்வாறு இப்பொருட்களுக்கு பெறுமதியினை அதிகரிக்கலாம் என்றும், பெறுமதியினை அதிகரிப்பதற்கு எவ்வாறான உதவிகள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கலாம் என்பது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டது.

வளவளராக கலந்து கொண்ட விதாதா மற்றும் சிறு கைத்தொழில் உத்தியோகத்தர்கள் பொருட்களின் பெறுமதியிடல், பொருட்களுக்கான வியாபார குறியீட்டினை எவ்வாறு தெரிவு செய்வது, விலையிடல் போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியான விளக்கங்களை வழங்கினர்.

மேலும் பொருட்களினை சந்தைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கம் வழங்கப்பட்டது. அதாவது பொருட்களுடைய சந்தைப்படுத்தல் தொடர்பாக எவ்வாறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இலகுவான முறையில் பொருட்களை சந்தைப்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் வளவாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்