ஆசிரியர் கல்வியை வலுப்படுத்துவதும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடும் புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் பிரதான அம்சங்களாகும்

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

ஆசிரியர் கல்வியை வலுப்படுத்துவதும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடும் கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் பிரதான அம்சங்களாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது சர்வதேச கல்வி ஆராய்ச்சி மாநாடு – 2026 (International Research Symposium on Education – 2026) நிகழ்வில் 2026 நவம்பர் 26ஆம் திகதி மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கலந்துகொண்டபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்ற இம்மாநாட்டின் ஊடாக, பிரதான உரைகள், தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் குழுக் கலந்துரையாடல்கள் மூலம் கல்வித்துறையில் ஆராய்ச்சிகளையும் அறிவுப் பரிமாற்றத்தையும் முன்னெடுப்பதற்கும், கல்விசார் கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அத்துடன், சமகாலக் கல்விசார் சவால்கள், புதிய போக்குகள் மற்றும் கொள்கைசார் திசைகள் தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இம்மாநாடு வழிவகுத்தது.

இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளமான International Research Symposium on Education - 2026 ஐ பிரதமர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், பின்னர் புதிய கல்விச் சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு இணையாக தேசிய கல்வி நிறுவகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களைப் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தையும் பார்வையிட்டார். 2027ஆம் ஆண்டில் 6ஆம் தர சுகாதாரம் மற்றும் உடற்கல்விப் பாடத்திற்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் முன்னெடுக்கப்படவுள்ள கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இப்பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்வி என்பது வெறுமனே தனிநபர்களைத் தொழில் சந்தைக்குத் தயார்படுத்தும் செயற்பாடு மட்டுமல்ல; பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசியப் பொறுப்புமிக்க பணியாகும் என பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார். பாடநூல்கள் மற்றும் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், முழுமையான கல்வி முறைமையையும் உள்ளடக்கும் வகையில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக 13 வருட பாடசாலைக் கல்வியின் முழுப் பாடத்திட்டக் கட்டமைப்பும் திட்டமிட்ட வகையில் படிப்படியாகச் சீர்திருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா, இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பொறியியல் மற்றும் முகாமைத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) பிஸ்வஜோய் சட்டர்ஜி, தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர்கள், ஆசிரியர் பயிலுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.