கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ரத்மலானை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் (UoVT) மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 2026 நவம்பர் 27ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் நலன்புரித் தேவைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்றவாறு ரத்மலானை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தை (UoVT) அபிவிருத்தி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

பல்கலைக்கழகத்தில் நிலவும் கல்விசார் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. தொழில்சார் துறையின் தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்ட குறித்த நிறுவனத்தின் பணியாளர் திட்டம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தேவையான சந்தர்ப்பங்களில் ஒப்பந்த அடிப்படையில் கைத்தொழில் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். நிலவும் வெற்றிடங்களுக்கான தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச தரநிலைகளைக் கருத்தில் கொள்வதுடன், நாட்டின் தேவைகளுக்கும் புதிய உலகளாவியப் போக்குகளுக்கும் ஏற்ற வகையில் வலுவான உள்தர உறுதிப்படுத்தல் செயன்முறையொன்றை (Internal Quality Assurance) உருவாக்குவதன் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் மாணவர் விடுதி வசதிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக அதன் தொடர்புடைய அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறைகளுடன் இணைந்து தீர்வுகளைத் தேடுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல் நடவடிக்கைகளையும் முற்றாகத் தடுப்பதற்கு மாணவர் சங்கங்களின் செயற்பாட்டுடன் கூடிய பொறுப்பும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானவை என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ரத்மலானை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.