கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்களுக்கும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் தலைமையிலான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாபெரும் மாணவர் சங்கம் மற்றும் மருத்துவ பீட மாணவர் சங்கப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் 2026 நவம்பர் 11ஆம் திகதி இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மனித வளத் தேவைகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் மாணவர் நலன்புரி உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கக்கூடிய வழிமுறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவர்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை நேரடியாகக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கேற்புடன் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் உயர்கல்வித் துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதற்கமைய, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போதுள்ள வளங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வினைத்திறனுடன் முகாமைத்துவம் செய்து, நடைமுறைச் சாத்தியமானதும் துரிதமானதுமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, மாணவர் சமூகத்தின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்து, கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றியும் வெற்றிகரமாகவும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தரமானதும் சிறந்ததுமான பல்கலைக்கழகச் சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.