“பிள்ளைகளின் இயல்பான திறமைகள் மற்றும் அபிலாஷைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குப் பொருத்தமான கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது புதிய கல்வி மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.”

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

அனைத்துப் பிள்ளைகளும் ஒரே கல்விப் பாதையில் பயணிக்க வேண்டிய பாரம்பரிய முறையை மாற்றியமைத்து, பிள்ளைகளின் இயல்பான திறமைகள், விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு ஏற்ப தமது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்வதற்குத் தேவையான பல்வேறு கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது புதிய கல்வி மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 நவம்பர் 21ஆம் திகதி இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற தேசிய தொழில்சார் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (Door to Door Skill Campaign) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

தொழிலற்ற நிலையில் உள்ள அல்லது பொதுக் கல்விப் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாத இளைஞர், யுவதிகளின் இயல்பான திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொழில் சந்தைக்குப் பொருத்தமான தொழில்சார் திறன்களாக மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவினால், சமூக வலுவூட்டல் அமைச்சின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாட்டிலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில், கிராமம் கிராமமாகவும் வீடு வீடாகவும் சென்று இளைஞர், யுவதிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டுவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் இளைஞர், யுவதிகளின் விருப்பங்கள், இயல்பான திறமைகள் மற்றும் ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குப் பொருத்தமான தொழிற்பயிற்சி வாய்ப்புகளுக்கு அவர்களை வழிநடத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பொதுக் கல்விப் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாத அல்லது தொழில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளின் இயல்பான திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொழில் சந்தைக்குப் பொருத்தமான தொழில்சார் திறன்களாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘Door to Door Skill Campaign’ தேசிய வேலைத்திட்டம் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் குறைவடைந்து வருவது ஒரு சாதகமான போக்காக இருந்தாலும், இளைஞர் வேலையின்மை இன்னும் குறிப்பிடத்தக்க சவாலாகவே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இளைஞர் தலைமுறையினரைப் பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் தொழில் சந்தையுடன் தீவிரமாக இணைத்துக்கொள்வது அத்தியாவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகக் கல்வி மாத்திரமே தொழில் மற்றும் தொழில்சார் வாய்ப்புகளுக்குள் பிரவேசிப்பதற்கான ஒரே வழி அல்ல என்றும், மாறிவரும் உலகளாவிய தொழில் சந்தைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக்கொள்வதற்குத் தொழிற்கல்வி உள்ளிட்ட பல மாற்றுப் பாதைகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, பிள்ளைகள் தமது திறமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் பாதைகளைத் தெரிவுசெய்வதற்குத் தேவையான வாய்ப்புகள், வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவை வழங்குவது புதிய கல்வி மறுசீரமைப்புகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழிற்கல்வியின் தனித்துவமான அம்சம், தொழில் சந்தையில் மாறிவரும் தேவைகளுக்கு விரைவாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் பதிலளிக்கும் திறனாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், இதற்காகத் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பயிற்சி நிறுவனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாடசாலைக் கல்விக்குள் தொழில்சார் அறிவையும் திறன்களையும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட விரிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கைத்தொழில் துறையில் பயிற்சியும் திறன்களும் கொண்ட தொழிலாளர்களுக்கான கேள்வி காணப்படுகின்ற போதிலும், அந்தத் தொழில் வாய்ப்புகளுக்கும் தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வி தொடர்பான தகவல்களை இளைஞர் சமூகத்தினரிடம் நேரடியாகக் கொண்டு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய பின்னர், அவர்களைத் தொழில் வாய்ப்புகள் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குள் வழிநடத்துவதும் ‘Door to Door Skill Campaign’ திட்டத்தின் மற்றுமொரு பிரதான நோக்கமாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற்கல்வி தொடர்பாக விழிப்புணர்வூட்டுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், அந்த வாய்ப்புகளை நடைமுறையில் பயன்படுத்தி தமது திறன்களை மேம்படுத்திக்கொண்டு, தொழில் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் இணைவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு செயற்பூர்வமான பங்களிப்பை வழங்குவதே இத்தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் பெறுபேறாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, நாடளாவிய ரீதியில் உள்ள 14,008 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் இளைஞர், யுவதிகளின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, அவர்களைத் தொழில் வாய்ப்புகளுக்கு வழிநடத்துவதுடன், தேசியப் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களைச் செயற்பூர்வமாகப் பங்களிக்கச் செய்வதையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இதற்காகக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல், கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளில் மனித வளங்களை வலுப்படுத்துதல், தேசிய தொழில்சார் தகைமைகள் (NVQ) ஊடாக உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொள்ளும் இளைஞர், யுவதிகளுக்கு ஆதரவு வழங்குதல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தையும், 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதையும் இலக்காகக் கொண்ட தேசிய இலக்குகளை அடைவதற்குத் திறன்களைக் கொண்ட இளைஞர் தலைமுறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.