வன யானை - மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்திட்டத்தைத் தயாரிக்கும் மேற்பார்வைக் குழுவும் செயற்குழுவும் பாராளுமன்றத்தில் கூடின

- மேற்பார்வைக் குழுவின் தலைவர், கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட முன்னேற்ற மீளாய்வு மற்றும் கொள்கை ரீதியான கலந்துரையாடல் -

வன யானை - மனித மோதலை விஞ்ஞான, சமூக-பொருளாதார மற்றும் சுற்றாடல் ஆகிய சகல பரிமாணங்களினூடாகவும் முகாமைத்துவம் செய்வதற்காகத் தயாரிக்கப்படும் தேசிய செயற்திட்டத்தின் முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஆரம்பகட்ட வரைபை (அறிக்கையை) 2026 டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு, நேற்று (20) இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் குழு அறை இலக்கம் 03 இல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்பார்வைக் குழுவின் தலைவர், கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மேற்பார்வைக் குழுவின் மக்கள் பிரதிநிதிகள், தேசிய செயற்திட்டத்தைத் தயாரிப்பதற்கான நிபுணத்துவச் செயற்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, செயற்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பணிகளைக் குறிப்பிட்ட கால அட்டவணைகளுக்கு அமையத் திட்டமிடுவதும் அத்தியாவசியமானது எனச் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து, செயற்குழுவின் தலைவரும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளருமான (அபிவிருத்தி) திரு. டி. பி. சி. உதய குமார அவர்கள் குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சுருக்கத்தை முன்வைத்ததுடன், கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ அவர்கள் யானை - மனித மோதலைத் தடுப்பதற்காகத் தயாரிக்கப்படும் இத்தேசிய செயற்திட்டத்தின் கருத்தியல் அணுகுமுறை தொடர்பில் நிபுணத்துவ விளக்கமொன்றை வழங்கினார்.

வன யானைகளின் இருப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகிய இரு தரப்பினரையும் கருத்திற்கொண்டு நடைமுறைச் சாத்தியமான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் மனிதர்களால் முன்னெடுக்கப்படும் சகல சட்டவிரோத செயற்பாடுகளையும் படிப்படியாக முகாமைத்துவம் செய்வதற்கும், அப்பிரதேசங்களை வன யானைகளுக்கு உகந்த சுற்றாடல் நிலைமைகளின் கீழ் அபிவிருத்தி செய்து, உணவு மற்றும் நீர் ஆதாரங்களை உள்ளடக்கிய வாழ்விட வளப்படுத்தல் (Suposhan) வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் (DWC) நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மின்சார யானை வேலிகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், காவல் அரண்கள் அமைத்தல் மற்றும் வன யானைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளின் தற்போதைய செயற்பாட்டு முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையொன்றையும் கௌரவ பிரதி அமைச்சர் இதன்போது சமர்ப்பித்தார். அதற்கமைய, மேற்பார்வைக் குழுவின் முன்மொழிவுகளையும் உள்ளடக்கிச் செயற்குழுவினால் தயாரிக்கப்படும் ஆரம்பகட்ட வரைபு அறிக்கையை 2026 டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்கும், அதனைத் தொடர்ந்து சகல தரப்பினரதும் பங்கேற்புடன் விசேட அமர்வொன்றை நடத்தி தேசிய செயற்திட்டத்தை இறுதி செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.