மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை மதிப்பீடு செய்து பாராட்டுவதுடன், அவர்களின் அழகியல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “பியசர - 2026”, “திறமைகளுக்குச் சிறகுகள்” நிகழ்ச்சித்திட்டம் 2026 நவம்பர் 14ஆம் திகதி கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட விசேட பாடசாலைகள் மற்றும் விசேட கல்விப் பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகள் பாராட்டி மதிப்பீடு செய்யப்பட்டன. அத்துடன், விளையாட்டு, அழகியல் கலைகள் மற்றும் கல்வித் துறைகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலைகளும் இதன்போது பாராட்டப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் தனித்துவமான அம்சமாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் அழகியல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சாதாரண பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர். இதற்கமைய, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய மாணவர்களும் ஒரே மேடையில் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) என்ற கருத்தாக்கத்தை வெறுமனே கோட்பாட்டு ரீதியான ஒன்றாக மட்டுப்படுத்தாமல், அதனை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி பிள்ளைகள் எந்த வகையிலும் ஏனைய பிள்ளைகளைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் அல்லர் என்பதைச் சுட்டிக்காட்டிய செயலாளர், உரிய வழிகாட்டல்கள், தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களும் சுதந்திரமாக வாழ்ந்து சமூகத்தின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாகச் செயற்படுவதற்கான சூழலை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான கல்வி முறைக்கு அமைச்சு முன்னுரிமை வழங்கி வருவதுடன், எதிர்காலத்தில் இப்பிள்ளைகளைப் பொதுக் கல்விக் கட்டமைப்புடன் மேலும் விரிவாக ஒருங்கிணைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்காக, வழமையான கற்பித்தல் பணிகளுக்கு அப்பால் சென்று அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவையையும் செயலாளர் இதன்போது பாராட்டினார். இந்தப் பணி வெறுமனே தொழில்சார் பொறுப்புடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத, மனிதாபிமான மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சேவையாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைச் சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்காகப் பெற்றோர் தொடர்ந்து வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பையும், அவர்களைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளையும் பாராட்டிய செயலாளர், இத்தகைய ஆதரவு பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
கல்வி நடவடிக்கைகள் மட்டுமன்றி, பேச்சு, நடிப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இப்பிள்ளைகள் வெளிப்படுத்தும் தனித்துவமான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் அமைச்சுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் வழங்கும் அனுசரணை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சினால் விசேடமாகப் பாராட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், விசேட கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.